×

விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கை 200 பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் மாணவ, மாணவிகள்

நாகர்கோவில், செப். 18: குமரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப் தொடங்கப்பட்டு, மாணவ, மாணவிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில், காவல்துறை சார்பில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தினமும் வாகன சோதனை நடத்தி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அபராதம், வழக்கு பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 8 மாதங்களில் 180 விபத்துக்கள் நடந்துள்ளன.

இதில் பைக் விபத்துக்கள் தான் அதிகம் ஆகும். அதிக வேகம், கவனக்குறைவால் விபத்துக்கள் அரங்கேறி உள்ளன. விபத்துக்களை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லூரிகளில் ரோடு சேப்டி கிளப் காவல்துறை சார்பில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோடு சேப்டி கிளப்பில் 20 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், செயலாளர் பொறுப்புகளும் உண்டு.

இந்த கிளப்பில் உள்ள மாணவ, மாணவிகள் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அவர்கள் பயின்று வரும் பள்ளிகள் முன், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில், போலீசாருடன் இணைந்து ஈடுபடுகிறார்கள். இதனால் பள்ளிகள் அருகில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் நெரிசல் இல்லாமல் செல்ல முடிகிறது. மாணவர்கள் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபடுவதன் மூலம், பள்ளி பருவத்தில் இருந்தே சமுதாய அக்கறை கொண்டவர்களாக, தங்களை மாற்றி கொள்ள வழிவகை ஏற்படுகிறது.

தேர்வு கால கட்டங்கள் தவிர மற்ற நாட்களில் மாணவ, மாணவிகள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுதுடன், சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், தங்களை ஒரு காவலராக அங்கீகரித்து கொண்டு, இந்த பணியில் கவனத்துடன் மாணவ, மாணவிகள் ஈடுபட வேண்டும் என எஸ்.பி. கூறி உள்ளார். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு எதிரே சாலையை கடக்க ஜீப்ரா லைன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அவ்வாறு லைன் இல்லாவிட்டால், உடனடியாக காவல்துறைக்கு இந்த கிளப் சார்பில் தெரிவிக்கிறார்கள். உடனடியாக அதிகாரிகளிடம் பேசி ஜீப்ரா லைன் அமைக்கப்படுகிறது. ரோடு சேப்டி கிளப் ஆய்வு செய்யப்பட்டு, காவல்துறை சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இந்த கிளப்பில் உள்ள மாணவ, மாணவிகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வுகளும் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படுகிறது. லைசென்சு பெறாமல் வாகனம் ஓட்ட கூடாது. மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து தான் பைக் ஓட்ட வேண்டும்.

அதி வேகமாக செல்ல கூடாது என்பதை வலியுறுத்த, இந்த ரோடு சேப்டி கிளப் வழிவகை செய்கிறது. மாணவ பருவத்தில் இருந்து சாலை விதிகள் தொடர்பாக அறிந்து கொள்வதுடன், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மாணவ, மாணவிகளுக்கு வர, ரோடு சேப்டி கிளப் வழி வகை செய்கிறது என்றனர். தற்போது காலாண்டு தேர்வுகள் என்பதால், படிக்க வாய்ப்பாக இது தொடர்பான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததும், மீண்டும் ரோடு சேப்டி கிளப் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Road Safety Club ,Nagercoil ,Kumari district ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...