×

புதுவை சட்டசபை இன்று கூடுகிறது குடிநீர் பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி, செப். 18: புதுவை சட்டசபை இன்று கூடுகிறது. குடிநீர் பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 10ம்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மார்ச் 12ம்தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 27ம்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும், அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக இன்று (18ம் தேதி) 15வது புதுவை சட்டசபையின் 6வது கூட்டத் தொடரின் 2வது பகுதி வரும் காலை 9.30 மணிக்கு பேரவை கூடத்தில் கூடுகிறது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து மசோதாக்களை துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர். ஜிஎஸ்டி திருத்த மசோதா புதுவையில் எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது. ஒருநாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் நகர பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டது. இலவச அரிசி நிறுத்தம், சென்டாக் கல்வி நிதி, பட்ஜெட்டில் அறிவித்தபடி, மகளிர் உதவித் தொகை, இலவச கோதுமை, தீபாவளி பரிசு ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Tags : Puducherry Assembly ,Puducherry ,Chief Minister ,Rangasamy… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...