புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தாமதம் காட்டி வரும் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ள உச்ச நீதிமன்றம், தேர்தலை நடத்த இறுதிக் கெடு விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சட்டப் பிரச்னைகளால் கடந்த 2022ம் ஆண்டு முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன.
இதுதொடர்பான வழக்கில், கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விதித்த நான்கு மாத காலக்கெடுவையும் மாநில தேர்தல் ஆணையம் தவறவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு எல்லை மறுவரையறைப் பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை, தேர்வுக்காலங்களில் பள்ளி கட்டிடங்கள் கிடைக்காதது போன்ற காரணங்களை ஆணையம் முன்வைத்தது. இவற்றைக் கேட்டு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்தின் காரணங்களை ஏற்க மறுத்துவிட்டனர்.
மார்ச் மாதம் நடைபெறும் தேர்வுகளைக் காரணம் காட்டி, ஜனவரியில் முடிக்க வேண்டிய தேர்தலைத் தள்ளிப்போட முடியாது எனக் கண்டித்த நீதிபதிகள், இனிமேல் எந்தக் காரணத்திற்காகவும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என எச்சரித்தனர். மேலும், நிலுவையில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 2026, ஜனவரி 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் எல்லை மறுவரையறைப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், தேவையான பணியாளர்கள் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நவம்பர் 30ம் தேதிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
