×

கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, செப்.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு தீபத்திருவிழாவை தரிசிக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் நவம்பர் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 4ம் தேதி மகா தீபப்பெருவிழா நடைபெறும். அன்று மாலை 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, வரும் 24ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். தொடர்ந்து, அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகின்றது.

Tags : Karthigai Deepathiruvila Bandhakal Mukurtham ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Karthigai Deepathiruvila ,
× RELATED மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு...