×

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட்டுக்கு ஈடி சம்மன்: சூதாட்ட செயலி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உழைப்பின்றி எளிமையாக பணம் சம்பாதிக்கவும், சிறிய அளவில் முதலீடு செய்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைகாட்டி பல்வேறு வகையில் ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது. இதற்காக சூதாட்ட செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட செயலிகள் பிரபல நடிகர்கள், நடிகைகள், யூடியூபர்களை கொண்டு விளம்பரம் செய்யப்படுகிறது.

இந்த போலி விளம்பரங்களை நம்பி பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள், பெண்கள் பணத்தை இழப்பதுடன், மனவேதனையில் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரியளவில் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா, அதன் மூலம் பணமோசடி செய்யப்பட்டதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி கணிசமான அளவு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக, ஒன்எக்ஸ்பெட் என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த ஒன்எக்ஸ்பெட் நிறுவனம் உலகளவில் பந்தயத்துறையில் 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் புக்மேக்கர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா வரும் 22ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23ம் தேதியும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இதேபோல் நடிகர் சோனு சூட் வரும் 24ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பியும், நடிகருமான மிமி சக்ரவர்த்தியிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : ED Summon ,Robin Uthappa ,Yuvraj Singh ,Sonu Sood ,New Delhi ,Enforcement ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்