×

கேரளாவில் சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே 16 வயது சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் டார்ச்சரில் ஈடுபட்டு வந்த அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரி, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே சந்தேரா பகுதியில் ஒரு தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறுவனின் வீட்டுக்கு வந்த ஒருவர், பெற்றோருக்கு தெரியாமல் அவனை வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார். தற்செயலாக அதைப் பார்த்த சிறுவனின் தாய், என்ன விவரம் என்று கேட்டபோது அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து சந்தேரா போலீசில் புகார் செய்தார்.

சிறுவர் நல அமைப்பினரின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த சிறுவன் ‘கே செக்ஸ்’ என்ற இணையதளத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளான். இதனால் அந்த சிறுவனை பலரும் தொடர்பு கொண்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் சில அரசியல் தலைவர்கள், காசர்கோடு மாவட்டத்தில் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு உயர் அதிகாரி, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி உள்பட பிரமுகர்கள் உள்ளனர்.

இவர்கள் கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் வெளியானவுடன் இவர்களில் பெரும்பாலானோர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்காக காசர்கோடு மாவட்ட எஸ்பியின் உத்தரவின்பேரில் வெள்ளரிக்குண்டு, சீமேனி, சந்தேரா, நீலேஸ்வரம் மற்றும் சிற்றாரிக்கல் ஆகிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : KERALA ,Thiruvananthapuram ,Railway Protection Force ,Kasaragod, Kerala ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்