×

அரசு நிலங்களை விதிமீறி பதிவு செய்த அசாம் பெண் அதிகாரி கைது: ரூ.2 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல்

கவுகாத்தி: அசாம் மாநில குடிமைப்பணி பெண் அதிகாரியான நுபுர் போரா, கடந்த 2019ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இவர் பார்பெட்டா மாவட்டத்தின் வட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பதிவு செய்து, குடியேறிகளுக்கு பணத்திற்காக கைமாற்றியதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உத்தரவின் பேரில், கடந்த ஆறு மாதங்களாக அவர் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். தற்போது இவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோராய்மாரி பகுதியின் வட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சரின் சிறப்பு கண்காணிப்புக் குழுவினர் நேற்று கவுகாத்தியில் உள்ள நுபுர் போராவுக்கு சொந்தமான வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 92 லட்சம் ரூபாய் ரொக்கமும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பார்பெட்டாவில் உள்ள அவரது வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மொத்தமாக சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நுபுர் போரா கைது செய்யப்பட்டார். அவரிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Assam ,Guwahati ,Nupur Bora ,Assam State Civil Service ,Officer ,Parbetta district ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது