×

செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரம் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை காட்டிலும் இவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதம் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை விசாரித்த நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி,\\” இந்த திட்டம் என்பது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை இரண்டும் சார்ந்ததாகும். ஆனால் ஒன்றிய அரசு தனது பங்கீட்டு தொகையை வழங்க மறுக்கிறது. குறிப்பாக தற்போது வரையில் ரூ.440கோடி வரையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகைய தொகையை தமிழ்நாடு அரசு மட்டுமே எவ்வாறு வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,\\” இந்த விவகாரத்தில் எதற்கெடுத்தாலும் ஒன்றிய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு சிரமமாக இருந்தால் இந்த விவகாரத்தில் ஏன் தனித்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கக் கூடாது. என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Union Government ,Tamil Nadu Government ,New Delhi ,Tamil Nadu Government Hospital ,Government Primary Health Centres ,Urban Primary Health Centres ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...