×

ஒன்றிய நிதித்துறை அதிகாரி பலியானதில் சொகுசு கார் ஓட்டி வந்து மோதிய பெண் கைது: பக்கத்து மருத்துவமனையில் சேர்க்காமல் 19 கிமீ தூரம் அலைக்கழித்த கொடூரம்

புதுடெல்லி: டெல்லியில் பைக் மீது பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில் ஒன்றிய நிதித்துறை அதிகாரி பலியானது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் நிதித்துறையில் துணைச் செயலாளராக பணியாற்றி வந்த நவ்ஜோத் சிங் என்பவரும், அவரது மனைவி சந்தீப்பும் டெல்லியில் உள்ள பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தவுலா குவான் அருகே ரிங் ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் பாலம் தூண் அருகே வந்தபோது, அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று இவர்களது பைக் மீது பின்புறமாக பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் நவ்ஜோத் சிங் பலியானார். சந்தீப் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான காரை ககன்ப்ரீத் என்ற பெண் ஓட்டி வந்ததாகவும், அவருடன் அவரது கணவர் பரிக்ஷித் இருந்ததாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். சொகுசு காரை ஓட்டி வந்த ககன்ப்ரீத் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் அவர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 281, 125, 105 மற்றும் 238-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

உயிரிழந்த நவ்ஜோத் சிங்கின் மனைவி சந்தீப் கூறுகையில்,’ விபத்துக்குப் பிறகு, உடனடியாக சிகிச்சை பெறுவதற்காக என்னையும் எனது கணவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, விபத்தை ஏற்படுத்திய பெண் கார் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் அதனை மறுத்த அவர், விபத்து நடந்த இடத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்’ என்றார். அந்த மருத்துவமனைக்கு கைது செய்யப்பட்ட ககன்ப்ரீத்தின் தந்தை இணை உரிமையாளர் என்று கூறப்படுகிறது.

எனவே வழக்கை மூடிமறைக்க முயற்சி நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன. மருத்துவமனை அதிகாரிகள் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களை சிதைக்கும் முயற்சியாக படுகாயம் அடைந்த நவ்ஜோத் மற்றும் சந்தீப்பை 19 கிமீ தொலைவில் உள்ள நுலைப் மருத்துவமனைக்கு ககன்ப்ரீத் அழைத்து சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags : Union Finance Department ,New Delhi ,BMW ,Delhi ,Navjot Singh ,Sandeep ,Delhi… ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கு; சோனியா-ராகுல் விடுதலையை எதிர்த்து ஈடி அப்பீல்