புதுடெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சட்டவிரோத நடைமுறைகள் கண்டறியப்பட்டால் புதிதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை ரத்து செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாத இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலையும் கடந்த மாதம் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் அட்டையையும் வசிப்பிட ஆவணமாக இணைத்து பதியலாம் என்றும், அதேப்போன்று பீகார் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்கும் விவகாரத்தில் ஆதாரை 12வது ஆவணமாக சேர்க்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா நீதிபதிகள் முன்னிலையில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், ‘‘ஆதார் அடையாள அட்டையை இந்திய குடியுரிமை ஆவணமாக கருத முடியாது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் கேட்கக்கூடிய 11 ஆவணங்களுக்கு சமமாக ஆதார் அடையாள அட்டை இருக்காது என்பதால் செப்டம்பர் 8ம் தேதி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவையும் ஆதார் அடையாள அட்டையை போன்று போலியாக உருவாக்க கூடியவை ஆகும். அப்படி இருக்கையில் ஆதாரை மட்டும் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களில் இருந்து விலக்கி வைக்க முடியாது. எத்தகைய ஆவணங்களையும் போலியாக உருவாக்க முடியும். ஆனால் சட்டம் என்ன சொல்கிறது?.
எனவே ஆதாரை அனுமதிக்க வேண்டும் என்றால், அதனை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் இதில் வரும் சாதக பாதகங்களை இந்திய தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளும். என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘அக்டோபர் 1ம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியில் வெளியிடப்படவுள்ளது. எனவே அதற்கு முன்பு வழக்கை பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், ‘‘செப்டம்பர் 28ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தசரா விடுமுறை உள்ளதால், வழக்கை அதற்கு முன்பு பட்டியலிட சாத்தியம் இல்லை. இதில் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டாலும் அது வழக்கு விசாரணையில் எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாதது. ஒருவேளை இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 1ல் வெளியிடும் வாக்காளர் இறுதி பட்டியலில் ஏதேனும் சட்டவிரோத நடைமுறைகள் பின்பற்றி இருப்பது கண்டறியப்பட்டால் நீதிமன்றம் நிச்சயம் திருத்தப்பட்ட பட்டியலை ரத்து செய்துவிடும். பீகார் தொடர்பான இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, நாடு முழுமைக்கும் பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
