டெல்லி: 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வழக்கம் போல ஜூலை 31ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ஐடிஆர் படிவத்தில் கொண்ட சில மாற்றங்கள் காரணமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருமானவரி தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். ஒருவேளை இன்றைக்கும் வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்றால் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வருமானவரி சட்டப்பிரிவு 234F ன் கீழ் தாமதமாக வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டிவந்தால் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டி இருந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் வருமானவரி சட்டப்பிரிவு 234Aன் கீழ் கடைசி தேதிக்கு பின் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தால் அதில் வருமானவரி நிலுவையில் இருந்தால் தாமதமாகும் ஒவ்வொரு வருடத்திற்கும் வருமானவரி நிலுவைக்கு 1சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். எனினும் டிசம்பர் 31ம் தேதிவரை திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரிக்கணக்கை வட்டி மற்றும் அபாரதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்த காலக்கெடு அனைவர்க்கும் பொருந்தாது என்று வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தனிநபராக வரி செலுத்துவோர் தணிக்கை தேவையில்லாத இந்து கூட்டுக்குடும்பங்களுக்கு மட்டுமே இந்த காலக்கெடு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. இன்றைக்குள் வருமானவரித்துறை தாக்கல் செய்யவில்லை என்றால் நிதி சார்ந்த பல்வேறு சிக்கல்கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரீபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும்போது ஏற்படும் இழப்புகளை சரி செய்வது உட்பட கேரி-ஃ பார்வர்டு சலுகைகளை இழக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்றைக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை அறிவுறுத்தி உள்ளது.
