×

‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ தமிழகம் முழுவதும் மக்களை கவரும் திமுக வாசக பேனர்: பூத் வாரியாக இன்று உறுதிமொழி ஏற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய, ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்’ வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடெங்கும் 68,000க்கும் மேற்பட்ட பூத் வாரியாக உறுதி மொழியை முன்மொழிய உள்ளனர்.

அதாவது, நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்;

ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் – தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இதுபோன்று வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : DMK ,Tamil Nadu ,Chennai ,Tamil ,Chief Minister ,M.K. Stalin ,DMK… ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...