×

முந்திரி தொழிலை பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்ற தனி அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில அளவிலான முந்திரி வாரியத்தை அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும். வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் இந்த வாரியத்தின் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத்தலைவராகவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் உறுப்பினர் செயலராகவும், இயக்குநர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், முதல்வர் (தோட்டக்கலை), தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், முந்திரி பயிரிடும் மாவட்டங்களில் இருந்து அரசால் நியமிக்கப்படும் இரண்டு விவசாயிகள் உள்ளிட்ட 12 உறுப்பினர்களை கொண்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளர்களின் நலன் காத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப வாரியத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பதப்படுத்தப்படாத முந்திரி கொட்டைகளை இறக்குமதி செய்து பதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையை சீராக்கும் வகையில் முந்திரி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் செயல்படும். இதன்மூலம் முந்திரி சாகுபடி, அறுவடை மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான புதிய வேலைவாய்ப்புகள் பெருகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Cashew Board ,Minister ,M.R.K. Panneerselvam ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Cashew Board'… ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்