×

ரேஷன் கார்டு கணக்கெடுப்பில் குளறுபடி: வசதியானவர் பிரிவில் சேர்த்ததால் கொண்டை கடலை ‘கட்’; கிராமத்தினர் புகார்

சிவகங்கை, டிச. 18: சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் கார்டு கணக்கெடுப்பில் வசதியானவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளதால் கொண்டை கடலை உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை என ஏராளமான கிராமத்தினர் புகார் அளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிக்காக ரேசன் கார்டு கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் என்.பி.ஹெச்.ஹெச் (முன்னுரிமையற்ற), பி.ஹெச்.ஹெச் (முன்னுரிமையுள்ள) என இருபிரிவாக கணக்கெடுத்துள்ளனர். இதில் என்.பி.ஹெச்.ஹெச் பிரிவில் உள்ள கார்டுகளுக்கு சில பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என ரேசன்கடைகளில் கார்டுதாரர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஏற்கனவே குறிப்பிட்ட சில பொருட்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது கொண்டை கடலையும் வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை வசதி படைத்தவர்கள் என குளறுபடியாக கணக்கெடுத்து ரேசன்கடைகளில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தியதால் இதுபோல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரங்களில் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ெதாடர்ந்து இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்ய சில கிராமங்களில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்கள் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் பயனில்லாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பல்வேறு கிராமத்தினர் தங்களை முன்னுரிமை பிரிவு கார்டுதாரர்களாக மாற்ற வேண்டும் என மனு அளித்து வருகின்றனர்.


காளையார்கோவில் அருகே கொல்லங்குடி, அழகாபுரி, திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தினர் கடந்த சில வாரங்களாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, ‘கணக்கெடுப்பு எந்த அடிப்படையில், யார் நடத்தினார்கள் என கேட்டால் எவ்வித பதிலும் இல்லை. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குறிப்பிட்ட சதவீத கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு அவர்கள் விருப்பத்திற்கு ஏழ்மை நிலையில் உள்ள ஏராளமானோரை வசதியானவர்கள் என்ற பிரிவில் சேர்த்துள்ளனர். மீண்டும் சரியானபடி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்