×

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்: மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என தலைமை நீதிபதி மீண்டும் உறுதி

புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பத்தாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, \\”மசோதா ஒப்புதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கால நிர்ணயம் செய்தது தவறானது. ஒருவேளை இந்த கால வரையறைக்குள் மசோதா மீது முடிவெடுக்கப்படவில்லை என்றால், இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு ஒரு ரிட் மனு மூலம் ஆளுநருக்கோ அல்லது குடியரசு தலைவருக்கோ மசோதா மீது முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரும் காலத்தில் எந்த ஒரு நபரும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகி உத்தரவை பெற வழி வகுக்கும். மேலும் மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்பது, மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்கு அனுப்ப வேண்டாம், சட்டப்பேரவைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டாம், மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டாம் என்பதையே குறிக்கிறது. கடந்த 50 ஆண்டுகால பட்டியலை எடுத்து பார்த்தால் சுமார் 90 சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளே ஒப்புதல் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை சர்ச்சையாக இருக்கக்கூடிய இரண்டு மசோதாக்களை தவிர்த்து, பிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூடிய விரைவில் என்று அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு மசோதாக்களின் தன்மைக்கு ஏற்ப கால அளவை எடுத்து முடிவெடுப்பதற்கு உண்டான பொருள் ஆகும். மாநில நலனுக்கு விரோதமாக இருந்தாலும் சில நேரத்தில் மக்களின் உணர்வை காரணம் காட்டி சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்படுகிறது.

எனவே அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைப்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதனால் மசோதா ஒப்புதல் விவகாரத்தில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிவெடுத்து தான் ஆக வேண்டும் என்று கால வரம்பை நிர்ணயம் செய்வது என்பது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது. எனவே மசோதா விவகாரத்தில் அனைத்து விதமான கண்ணோட்டத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி ,‘‘கடந்த 75 ஆண்டுகளான வரலாற்றில் ஆளுநர்கள் 98சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள் அல்லது அதன் மீது முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவரை 33 மசோதாக்கள் குறிப்புகளுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 12 மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புவதில் பிரச்னை கிடையாது.  ஆனால் முடிவு எடுக்காமல் நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றால் கிடையாது. அது தான் தற்போது கேள்வியானது என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது எனக்கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,President ,Chief Justice ,New Delhi ,P.R. Kawai ,Draupadi Murmu ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...