×

முளைப்புத்திறன் பாதிக்கும் அபாயம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்

பட்டுக்கோட்டை, டிச. 18: தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத்தின்கீழ் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் கல்யாண ஓடை மானாவாரி தொகுப்பை சேர்ந்த குழு விவசாயிகளின் கூட்டம் கல்யாணஓடையில் நேற்று நடந்தது. கல்யாணஓடை மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக்குழு தலைவர் வைரவசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மானாவாரி தொகுப்பில் தற்போது பயிரிடவுள்ள உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை துவக்கி வைத்து மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி பேசுகையில், மானியத்தில் எக்டேருக்கு 20 கிலோ வீதம் பெறப்பட்ட வம்பன் 6 ஆதார் விதைகளை டிரைக்கோடெர்மாவிரிடி கிலோவுக்கு 7 கிராம் அரிசி கஞ்சியில் கலந்து விதைகளை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின் விதைப்பு செய்வதால் விதை மூலம் பரவும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

பின்னர் வயலில் எக்டேருக்கு 500 மிலி ரைசோபியம் இடுவதன் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்து கிரகித்து உளுந்து பயிருக்கு தருவதால் உரச்செலவை குறைக்கலாம். எக்டேருக்கு 250 கிலோ ஜிப்சம் இடுவதால் மண்ணின் இறுக்கம் குறைந்து வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் இந்த குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட தொழில்நுட்பங்களை பின்பற்றி குறைந்த செலவில், அதிக மகசூல் பெறலாம் என்றார். விதை நேர்த்தி பற்றிய செயல்விளக்கத்தை வேளாண் அலுவலர் சாந்தி செய்து காட்டினார். கூட்டத்தில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி, வேளாண் உதவி அலுவலர் முருகேஷ், அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் சுகிர்தா, அய்யாமணி மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...