×

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவாரூர் நகர தலைவர் ஜி.செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்து முன்னணி சார்பில் 36ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி நடந்தபோது, திருவாருர் டி.எஸ்.பி. மணிகண்டன் திட்டமிட்டு, ஊர்வலத்தினர், பக்தர்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், சாமி சிலை மற்றும் ஊர்வல தேரையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, டி.எஸ்.பி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்காத காவல்துறையை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தோம். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, விநாயகர் ஊர்வலத்திற்கு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கினாலும், இரவு 7.45 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. ஊர்வலத்தை நடத்திய அனைவரும் குடிபோதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. சாமி சென்ற தேர் மற்றும் சிலையை காவல்துறையினர் சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.எஸ்.பி.க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Vinayagar Chaturthi ,Chennai ,Thiruvarur ,president ,G. Senthilkumar ,Hindu Munnani ,Vinayagar Chaturthi festival ,Thiruvarur DSP Manikandan ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...