×

பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த மாதம் இறுதியில் பல இடங்களில் பரவலான மழையால், சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவானது.

இருப்பினும், ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவானதுடன் விற்பனையும் மந்தமானது. சில வியாபாரிகள் மட்டும் மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற சந்தை நாளின்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

மேலும், ஓணம் பண்டிகை நிறைவடைந்து கேரள வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, மாடு விற்பனை விறு விறுப்புடன் நடைபெற்றதுடன் அவை விரைந்து விற்பனையாகியுள்ளது.

இதில், காளை மாடு ரூ.60 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.55 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.42 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடுகள் ரூ.65 ஆயிரம் வரையிலும், கன்று குட்டிகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலும் என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தில் ரூ.1.60 கோடிக்கு மாடு விற்பனை இருந்தது. ஆனால் நேற்று, ரூ.2 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi cattle market ,Pollachi ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...