×

ராமதாஸ் ஆதரவாளரை கொல்ல முயற்சி கும்பலுக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்தவர் தூக்கிட்டு தற்கொலை

கும்பகோணம்: ராமதாஸ் ஆதரவாளரை கொல்ல முயன்ற கும்பலுக்கு வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின்(55). ராமதாஸ் ஆதரவாளரான இவர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர், மாநில நிர்வாக குழு உறுப்பினர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக உள்ளார். கடந்த 5ம்தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் தனது அறையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த ம.க.ஸ்டாலின் மீது ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்றனர்.

அந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக கும்பகோணத்தை சேர்ந்த சிலரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கும்பகோணம் அருகே உடையாளுர் அண்ணாநகரை சேர்ந்த லட்சுமணன்(33), ஸ்டாலினை கொலை செய்ய வந்த மர்மகும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், லட்சுமணனிடம் விசாரிக்க உடையாளூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மதியம் சென்றனர். அங்கு லட்சுமணன் இல்லை.

இதனால் வீட்டிலிருந்த அவரது அண்ணன் ராமன்(35) மற்றும் லட்சுமணனின் மனைவி மதனா(23) ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் லட்சுமணன் வீட்டிற்கு வந்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு லட்சுமணன் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Tags : Ramadoss ,Kumbakonam ,Thanjavur ,Aduthurai Town Panchayat ,President ,M.K. Stalin ,Thanjavur North District ,PMK ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...