×

வாக்காளர் பட்டியல் மோசடி: விளம்பர நோக்குடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்!!

சென்னை: வாக்காளர் பட்டியலில் மோசடி வழக்கில் ரூ.1 லட்சம் அபராததுடன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெங்கட சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2024ம் ஆண்டு நடந்த 17வது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : HC ,Chennai ,Madras High Court ,Venkata Sivakumar ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...