×

நேபாளத்தில் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு .. வெளிநாடு தப்பிச் செல்ல பிரதமர் சர்மா ஒலி திட்டம்

காத்மாண்டு: நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல பிரதமர் சர்மா ஒலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் ஒன்று திரண்டு நேற்று பேரணி நடத்​தினர். அப்​போது நியூ பனேஷ்வரில் நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி போ​ராட்​டக்​காரர்​கள் உள்ளே நுழைய முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை வீசி எரிந்​தும் தாக்​குதல் நடத்​தினர்.இதையடுத்​து,போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது. இந்த கடும் மோதலில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நேபாளத்தில் 2வது நாளாக இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இளைஞர் போராட்டம் எதிரொலியாக நேபாளத்தில் 3 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். உள்துறை அமைச்சர் நேற்று பதவி விலகிய நிலையில் இன்று மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகினர். நேபாளத்தில் பிரதமர் இல்லம், அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி இல்லம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்த நிலையில் நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா வீடு மீதும் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேபாளத்தில் அமைச்சர் பிருத்வி சுபா வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. ஆளும் கட்சி நிர்வாகி பகதுர் வீட்டின் மீதும் இளைஞர்கள் தீ வைத்தனர். பகதூர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேபாள பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Tags : Nepal ,Sharma ,Kathmandu ,government ,Facebook ,YouTube ,X ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...