ஈரோடு, செப். 9: ஊஞ்சலூர் அரசு பள்ளி மாணவர்கள் 24 பேர் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள் கடந்த 3ம் தேதி ஈரோட்டில் நடந்தது. கொடுமுடி ஊஞ்சலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதில், ஊஞ்சலூர் பள்ளி மாணவர்கள் 37 தங்க பதக்கம், 24 வெள்ளி பதக்கம், 11 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மேலும், இப்போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற 24 மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதையடுத்து மாநில போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் அசோகன், சதீஷ் ராயன் ஆகியோருக்கு பள்ளியின் தலைமையாசிரியை தாட்சாயினி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.
