நாகப்பட்டினம், செப்.9: நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்த 25 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்துமுன்னணி சார்பில் நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் 25 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் நேற்று நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு வந்தது. அங்கிருந்து நாலுகால் மண்டபம், நீலா தெற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து, நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு படகுகள் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்ட சுப்ரியா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
