×

தர்மபுரி மாவட்டத்தில் துவரை கொள்முதல் தொடக்கம்

தர்மபுரி, டிச.17: தர்மபுரி கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு 2020-2021ம் ஆண்டு காரீப் பருவத்தில், பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், துவரை கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் 11418 ஹெக்டர் பரப்பளவில், துவரை சாகுபடி செய்யப்பட்டு துவரை அறுவடை எதிர் நோக்கியிருக்கும் நிலையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தர்மபுரி விற்பனை குழுவின் கீழ் செயல்பட்டு வரும், தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 300 டன், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 240டன் மற்றும் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக 120 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. நன்கு காயவைத்த தரமுள்ள துவரை, கிலோ ஒன்றிற்கு ₹60 வீதம் கொள்முதல் செய்யப்படும். துவரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் துவரை கொள்முதல் நேற்று (15ம் தேதி) தொடங்கி 14.03.2021ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தர்மபுரி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்து, தங்களது துவரையை விற்பனை செய்யலாம். இத்திட்டத்தை, அனைத்து பயறு வகை சாகுபடி செய்யும் விவசாய பெருமக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : purchase ,Dharmapuri district ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்