×

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு, அந்நாடுகளுக்கு எட்டு நாட்கள் பயணமாக, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி காலை சென்னையிலிருந்து ஜெர்மனி சென்றனர். முதலில் ஜெர்மனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவர்களுடனும், முதலீட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈர்த்தார். இந்த பயணத்தால், தமிழகத்துக்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 17,613 நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

இங்கிலாந்து முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு ஜெர்மனியிடம் இருந்து, 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, ரூ.7,020 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமோட்டிவ், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியது.

இந்நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், இன்று சென்னை திரும்பினர். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது; “எனது வெளிநாட்டு பயணங்களில் முத்தாய்ப்பாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் அமைந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறந்தது பெருமைமிகு தருணம். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ரூ.15,516 கோடி மதிப்பிலான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த முறைதான் தமிழ்நாட்டுக்கு அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வெற்றிகரமான பயணம்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Germany ,UK ,Chennai Airport ,Chief Executive ,M. K. Stalin ,
× RELATED தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299...