×

நுகர்வோர் மையம் கோரிக்கை திருத்துறைப்பூண்டியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நரிக்குறவர் இன மக்கள் தவிப்பு பட்டா இல்லாததால் புதிய வீடு கட்டுவதிலும் சிக்கல்

திருத்துறைப்பூண்டி, டிச.17: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளவீரன் நகரில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு அடிபடை வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நரிக்குறவர்கள் சர்வோதய சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், எங்களை ஜாதியின் அடிப்படையில் எம்பிசியில் வைத்துள்ளதால் அரசு அறிவிக்கும் எந்தவொரு சலுகையும் பெறமுடியாமல் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எங்கள் பிள்ளைகளைக் கூட படிக்க வைக்க முடியவில்லை. எனவே எங்களை எஸ்.டி. இன மக்களாக மாற்றி தந்தால் எங்கள் இனம் வாழ்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் தெருவிற்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் நகராட்சியால் அமைத்து கொடுத்த சிமெண்ட் சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் தாசில்தார், நகராட்சி அதிகாரி ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவொரு பயனும் இல்லை.

எங்களுக்கு 30 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்குவதாக கூறி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் செல்லும் முள்ளியாற்றின் கரையின் ஓரத்தில் குடியிருந்து வந்த எங்களை அப்போதைய வருவாய் தாசில்தார் மற்றும் கலெக்டர் தற்போது வசித்துவரும் பகுதியில் குடியமர்த்தினார்கள். ஆனால் இன்று வரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. அதனால் அரசு வழங்கும் சலுகைகளை பெறமுடியவில்லை. நல்ல ஒரு வீடு கட்டிக்கொள்ள முடியவில்லை. எனவே அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். தற்போது மழைக்காலங்களில் எங்கள் வீடுகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளானது. மிகவும் பள்ளமான பகுதி என்பதால் பெரும் சேதம் ஏற்படுகிறது. எனவே எங்கள் தெருவை சுற்றி மண்ணால் கரை கட்டி கொடுத்தால் எங்கள் தெருவிற்கு தண்ணீர் புகாமலும், பலத்த வெள்ள சேதம் ஏற்படாமலும் இருக்கும். மேலும், எங்கள் இனத்தவர்கள் ஒன்று கூடி துக்க காரியங்கள் நடத்தி கொள்வதற்கென சமுதாயக் கூடம் ஒன்று இருந்தது. இது கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து விட்டது. இதனை கான்கிரீட் கட்டிடமாக கட்டித்தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : houses ,Tiruthuraipoondi ,
× RELATED கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்