×

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு ஒரு தகுதிக்கான தேர்வு ஆகும். இந்த நிலையில் சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா? என்பது குறித்தான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு இதையடுத்து மனுவை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘‘ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், அதேப்போன்று பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு அதாவது டெட் கட்டாயம் ஆகும். இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். இருப்பினும் அதேநேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்வு பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம். சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிக்க அது தொடர்பான கோரிக்கை கொண்ட வழக்கை மட்டும் உச்ச நீதிமன்றத்தின் உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,India ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...