×

வாக்குத் திருட்டு விவகாரம் ஹைட்ரஜன் குண்டு போல் வெடிக்கும்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பீகார்: வாக்குத் திருட்டு விவகாரம் ஹைட்ரஜன் குண்டு போல் வெடிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17ம் தேதி சசாராம் பகுதியில் யாத்திரை தொடங்கினார். ராகுல் காந்தியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தள் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உடன் சென்றார். வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று, விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். யாத்திரையின் போது வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் பேரணியில் பிரியங்கா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் 16 நாட்கள் யாத்திரை இன்றுடன் முடிவடைகிறது. பீகாரில் வாக்கு உரிமை யாத்திரை நிறைவுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது;

வாக்குத் திருட்டு விவகாரம் ஹைட்ரஜன் குண்டு போல் வெடிக்கும். கர்நாடகாவில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து வெளியிட்ட ஆதாரம் அணுகுண்டுதான். வாக்குத் திருட்டு குறித்து அடுத்து நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டு போல் வெடிக்கும். காந்தியை கொன்ற கூட்டம்தான், தற்போது அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்க முயற்சிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க நடக்கும் முயற்சியை, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அவர் கூறினார்.

Tags : Rahul Gandhi ,Bihar ,Lok Sabha ,Opposition Leader ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...