×

அப்ப… என் அருமை நண்பர் டிரம்ப் இப்ப… என் அருமை நண்பர் ஜி ஜின்பிங்: மோடியை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர்

 

புதுடெல்லி: பிரதமர் மோடியின் சீனப் பயணத்தின் போது, இந்திய-சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காகப் பிரதமர் மோடி சீனா சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘அப்போது ‘என் அருமை நண்பர் டொனால்ட் டிரம்ப்’ என்று கூறினார். இப்போது ‘என் அருமை நண்பர் ஜி ஜின்பிங்’ என்று கூறியுள்ளார். கடந்த 2020ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு நமக்கு நீதி கிடைத்ததா? கல்வான் தாக்குதலுக்கு முன்பு இருந்த நிலை எல்லையில் இப்போது உள்ளதா? அந்த காலகட்டத்தில் நமது படைகள் ரோந்து சென்ற பகுதிகளில் இப்போது சுதந்திரமாக ரோந்து செல்ல முடிகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரதமரிடம் பதில் கிடைக்குமா? நண்பர்கள் மாறுகிறார்கள், இதயங்கள் உடைகின்றன; பின்னர் புதிய நண்பர்கள் தேடப்படுகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் நிலையை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ‘இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் சமநிலைப்படுத்துவது, மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது, எல்லை தாண்டிய நதிகள் மற்றும் பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்ப்பது குறித்து விவாதித்தனர். பரஸ்பர மரியாதை, நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவகாரங்களில் கூடுதல் முன்னேற்றம் காண இருவரும் விருப்பம் தெரிவித்தனர். எல்லைப் பிரச்னையும் விவாதத்தில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு படைகள் வெற்றிகரமாக விலக்கிக்கொள்ளப்பட்டதையும், அதன் பிறகு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பேணப்படுவதையும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்’ என்று தெரிவித்தார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் அளித்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

 

Tags : Trump ,Xi Jinping ,Congress ,Modi ,New Delhi ,China ,Congress party ,Union government ,India ,Shanghai Cooperation Organization Conference ,Congress party… ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்