×

பண்டிகையின் போது மறக்காதீர்கள் உள்ளூர் தயாரிப்புகளில் பெருமை கொள்ளுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் பெருமை கொள்ள வேண்டும். வரும் பண்டிகை காலங்களில் புத்தாடை, பரிசுப் பொருட்கள் வாங்கும் போது, உள்ளூர் தயாரிப்புகளை மறந்து விடக் கூடாது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

பிரதமர் மோடி நேற்று தனது 125வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது:
வாழ்க்கையில் தேவையான அனைத்தும் சுதேசி (இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை) தயாரிப்புகளாக இருக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, துர்கா பூஜை, தீபாவளி என நாடு முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இவற்றில் புத்தாடைகள், பரிசுப் பொருட்கள், அலங்கார பொருட்கள் என எதையும் வாங்கும் போதும், சுதேசி பொருட்களை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். இது சுதேசி என்று பெருமை கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்பதே நமது ஒரே மந்திரம், தற்சார்பு இந்தியா என்பதே நமது ஒரே பாதை, வளர்ச்சி அடைந்த இந்தியா என்பதே நமது ஒரே இலக்கு.

தற்போதைய பருவமழைக் காலத்தில், இயற்கை பேரழிவுகள் நாட்டை சோதிக்கின்றன. சில இடங்களில், வீடுகள் அழிக்கப்பட்டன. வயல்கள் நீரில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மக்களின் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியது. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.

தேசிய மற்றும் மாநில அவசரகாலப் படைகள் மக்களுக்கு உதவ இரவும் பகலும் உழைத்து வருகின்றன. நவீன தொழில்நுட்பம் மற்றும் வளங்கள், வெப்ப கேமராக்கள், உயிர் கண்டறியும் கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் டிரோன் கண்காணிப்பு ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான நேரத்தில் பாதுகாப்புப் படைகள், உள்ளூர் மக்கள், சமூகப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நிர்வாகம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. இதே போல நாட்டின் முதல் கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டிகள் நகரில் உள்ள தால் ஏரியில் நடைபெற்றது. முன்பு இதெல்லாம் சாத்தியமற்றது. இப்போது நாடு மாறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்