×

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு; 1,910 பதவிக்கான தேர்வை 51,416 பேர் எழுதினர்: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான 1,910 பதவிகளுக்கு 51,416 பேர் தேர்வு எழுதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் டிப்ளமோ, ஐ.டி.ஐ. கல்வித் தகுதி உடைய 58 விதமான பதவிகளை உள்ளடக்கிய பணிகளில் காலியாக உள்ள 1,910 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு 76 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தாள்-1 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொதுப்பாடங்கள் மற்றும் திறனறிவுத் தேர்வாக நடந்தது. 38 மாவட்டங்களில் 248 அறைகளில் இந்த தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 21 அறைகளில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை 51 ஆயிரத்து 416 பேர் எழுதினர். 25 ஆயிரத்து 558 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 33.2 சதவீதம் பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தாள்-2 தேர்வு(தொழில்நுட்பப்பாடங்கள்) வருகிற 7ம் தேதி மற்றும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Government Personnel Selection Commission ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...