புதுடெல்லி: ‘‘துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுஉச்ச நீதிமன்றத்தில் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், எங்களது தரப்பு வழக்கை அங்கு மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ வேண்டுமானால் தமிழ்நாடு அரசு வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்.
உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது. இதே கோரிக்கை கொண்ட வழக்குகள் செப்டம்பர் 24ம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் எங்களது வழக்கை கண்டிப்பாக வாபஸ் வாங்க முடியாது. நாங்கள் கூடுதல் விளக்க மனுவை தாக்கல் செய்கிறோம் என்று காட்டமாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை வரும் செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
