குடியாத்தம், ஆக.30: குடியாத்தம் அருகே நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான உடனடி ஆணையை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்து இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான உயர்வுக்கு படி எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மனங்குப்பம் கிராமத்தில் உள்ள கேஎம்ஜி கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 27 பள்ளிகளை சார்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த 154 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 94 மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் இணைய ஆர்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினர். அதில் 51 மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி கூறியதாவது: உயர்வுக்குப்படி எனும் உயர்க்கல்வி வழிகாட்டி திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் கல்வி சார்ந்த திட்டங்களில் ஒரு சிறந்த திட்டமாகும். அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயர்க்கல்வி கட்டாயம் பயில வேண்டும் என்பதற்காக இது போன்ற வழிகாட்டி நிகழ்வுகள் அரசால் நடத்தப்படுகின்றது
இந்நிகழ்வுகளில் கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகள் குறித்த விவரம் வழங்கப்பட்டு கல்லூரியில் இணைய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். கல்லூரியில் சேர்ந்த பிறகும் அரசின் சார்பில் பல்வேறு கல்வி சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதம் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. மேலும் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இரண்டாம் ஆண்டு பயிலும்போது ஆங்கில பேச்சுத்திறன் மற்றும் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கல்லூரி இறுதி ஆண்டு பயிலும்போது வேலைவாய்ப்பு குறித்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு நல்லதொரு வேலை கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 8,600க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உயர்க்கல்வியில் இணைந்துள்ளனர்.எஞ்சியுள்ள மாணவர்களையும் உயர்க்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இளைஞர்கள் உயர்க்கல்வியில் சிறந்து விளங்கி நல்ல வேலைவாய்ப்பினை பெறும்போது மட்டுமே வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார், திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் காயத்ரி, உதவி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கல்லூர் முதல்வர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
