×

வீரராகவபெருமாள் கோயிலில் 10 அமாவாசைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

திருவள்ளூர், டிச.15: வீரராகவபெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரிட வாய்ப்புள்ள காரணத்தால் அம்மாவாசை முன்தினம் முதல் அமாவாசை மறுதினம் வரை மூன்று நாட்களுக்கு வீரராகவ பெருமாள் கோயில் மூலவரை தரிசனம் செய்ய கடந்த 10 அமாவாசைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரையில் 41778 பேர் பாதிக்கப்பட்டு இதில் 40663 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 664 உள்ளது. மேலும் 451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதலே திருவள்ளூர் வீரராகவர் கோயில் முன்பு 1000க்கும் மேற்பட்ட  பக்தர்கள் குவிந்தனர். இதனையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.


இந்த மாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் அதிகம் கிடைக்கும் என்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள் வழிபட  அனுமதி அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் குளக்கரையில் அனுமதி மறுக்கப்பட்டதால்  திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள பாதாள விநாயகர் ஆலயம் அருகே அமைந்துள்ள ஏரிக்கரையில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்கின்றனர்.

Tags : Devotees ,Veeragavaperumal ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி