சீதாமர்ஹி: பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் அதிகார யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சீதாமர்ஹியில் நடந்த பேரணியில் நேற்று ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,’பீகார் மக்கள் பாஜ மற்றும் தேர்தல் ஆணையம் தங்கள் வாக்குரிமையை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
அதனால் தான் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியில் பலவீனமான பிரிவை சேர்ந்த மக்கள் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்குகளைத் திருடுவதில் ஈடுபட்டிருந்த பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதை மகாராஷ்டிரா, அரியானா மற்றும் கர்நாடகாவில் செய்தார்கள். இப்போது அவர்கள் பீகாரில் அதை மீண்டும் செய்ய விரும்புகிறார்கள். அதை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வரும் நாட்களில் பா.ஜ, தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய வாக்கு திருட்டு குறித்து கூடுதல் ஆதாரங்களை நாங்கள் வழங்குவோம்’ என்றார். யாத்திரைக்கு முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜானகி கோயிலுக்குச் சென்று ராகுல்காந்தி பிரார்த்தனை செய்தார்.
செப்.1ல் யாத்திரை நிறைவு: ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்காளர் அதிகார யாத்திரை செப்.1 அன்று பிரமாண்ட பேரணியுடன் பாட்னாவில் நிறைவு பெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரை அனைத்து மத மக்களும் பங்கேற்கும் ஒரு மத யாத்திரை போன்றது. செப்டம்பர் 1 ஆம் தேதி, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை வரை நமது தலைவர்கள் அணிவகுத்துச் செல்லும் ஊர்வலத்துடன் யாத்திரை முடிவடையும். ஆனால் இது முடிவாக இருக்காது. நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக இருக்கும்’ என்றார்.
* மோடியின் தாயாரை அவமதித்ததாக புகார்
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையின் போது பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக பா.ஜ புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வீடியோவையும் பா.ஜ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,’ பிரதமர் மோடியின் மறைந்த தாயாருக்கு எதிராக அநாகரீகமான மொழியைப் பயன்படுத்துவது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. ஆர்ஜேடி-காங்கிரஸின் தேர்தல் மேடையில் இருந்து வரும் இந்த வெறுக்கத்தக்க கருத்து, பீகாரிலும், நாடு முழுவதும் உள்ள தங்கள் தாயை கடவுளுக்கு சமமாகக் கருதும் ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
