வேலூர், ஆக.29: மாநில அளவில் பயிர்விளைச்சல் போட்டியில் அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளுக்கு ரூ.2.5லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிகளவில் உற்பத்தியை பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம் 2ம் பரிசாக ரூ.1.5 லட்சம். 3ம் பரிசாக ரூ.1 லட்சம் என மொத்தம் 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய 11 பயிர்களில் மாநில அளவில் அதிக உற்பத்திறன் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்த பயிர் விளைச்சல் போட்டியில் அறுவடைக்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ம் ஆண்டில் கம்பு, ராகி, சாமை, துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் சாகுபடியும், சாமை 1 ஏக்கர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். பயிர் விளைச்சல் போட்டிக்கு நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
