தேவகோட்டை: தேவகோட்டை அருகே பைபாஸ் சாலையில் இரவு நேர விபத்துகள் தொடர்வதால் எச்சரிக்கை பலகையுடன் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி – ராமேஸ்வரம் பைபாஸ் சாலை சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே கடந்துசெல்கிறது. இந்த சாலையில் மாவிடுதிக்கோட்டை ஊராட்சி, சிவந்தான்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் எதிரே சாலையின் மையத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையில் நடுவில் சிறிய அளவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தடுப்புச் சுவரில் மோதி வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இரவு நேரத்தில் இந்த பகுதியில் போதிய அளவில் வெளிச்சம் இல்லாததும், எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததாலும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இரவில் தடுப்பு சுவரில் மோதி தொடர்ந்து விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர் புளியால் ஆனந்த் என்பவர் கூறுகையில், `இந்த இடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும். அல்லது சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றிவிட்டு, எச்சரிக்ைக பலகை, இரவில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் விபத்துகள் தவிர்க்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
