திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் நாய் போல குரைத்தபடி சக பயணிகளை கடிக்க பாய்ந்த பீகார் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பொது பெட்டியில் பயணித்த வடமாநில வாலிபர் ஒருவர், திடீரென பயணிகளை பார்த்து நாய் போல குரைக்க துவங்கினார். இதனால் பயணிகள் கலக்கமடைந்தனர். பின்னர், அந்த வாலிபர் சக பயணிகளை கடிக்க முயற்சிப்பது போன்ற செயலில் ஈடுபட்டார்.
இதனால் அச்சமடைந்த பயணிகள் பலர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரயில், திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார், சம்பந்தப்பட்ட பயணியை பிடித்தனர். மேலும் அவர் யாரையும் கடித்துவிடாமல் இருக்க முகம், கை, கால்களை துணியால் கட்டினர். பின்னர், அந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும் அந்த வாலிபர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், உடலில் நாய் உள்ளிட்ட விலங்குகள் ஏதும் கடித்ததற்கான எந்த ஒரு அடையாளமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மாறாக, போதை பொருள் பயன்படுத்தியதால் அவர் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
