- கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகம்
- கலெக்டர்
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்
- சித்ரா
- கோயம்புத்தூர் விமான நிலையம்
கோவை: கோவை பாஸ்போர்ட் ஆபிசுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஏர்போர்ட் செல்லும் வழியில் சித்ரா அருகில் கோவை மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ் உள்ளது. இதன் பழைய அலுவலகம் அவிநாசி சாலை சிக்னல் உப்பிலிபாளையத்தில் செயல்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் ஒரு சில ஊழியர்கள் வந்திருந்தனர்.
அப்போது உப்பிலிபாளையம் ஆபீசில் இ-மெயில் முகவரியை பார்வையிட்டபோது அதில், பாஸ்போர்ட் அலுவலகங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதறும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதேபோல், மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ் உள்ள பீளமேடு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இரு பாஸ்போர்ட் ஆபீசிலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் நவீன கருவிகளுடன் ஒவ்வொரு பகுதியாக அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. சோதனை முடிவில் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதேபோல், கோவை கலெக்டர் அலுவலக இ-மெயில் முகவரிக்கும் நேற்று 2வது நாளாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதனையடுத்து ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மலர் என்ற மோப்பநாய் மற்றும் அதி நவீன கருவிகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், பார்க்கிங், அலுவலக அறை உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தினர். இறுதியில் இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர். பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் ஒரே நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து 2வது நாளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
