திருமலை: தெலங்கானாவில் தொடர் கனமழையால் காமரெட்டி மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பாலம் பணியின்போது சிக்கிய 10 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தண்டவாளங்கள், கார்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேடக் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்து வருகிறது. இதில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. காமரெட்டி-நிஜாமாபாத் ரயில் பாதை வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. இதேபோல் ஐதராபாத்தில் இருந்து நிஜாமாபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காமரெட்டி ஹவுசிங் போர்டு காலனியில் கடும் வெள்ளம் சூழ்ந்ததால் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காமரெட்டி நிஜாம் சாகர் மண்டலத்தின் நிலக்கரி குடிசை ஓடை அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளநீர் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஏறி உதவிக்காக காப்பாற்றும்படி கதறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பைபர் படகுகளில் சென்று தொழிலாளர்களை மீட்டனர். காமரெட்டி நகரில் ஹவுசிங் போர்டு காலனி முற்றிலும் நீரில் மூழ்கியது. காமரெட்டி நகர போலீசார் வெள்ளத்தில் சிக்கிய 60 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தினர். காமரெட்டி மாவட்டத்தில் உள்ள எல்லாரெட்டியிலிருந்து திம்மரெட்டி செல்லும் சாலையில் கல்யாணி திட்ட பாலம் நிரம்பி வழிந்ததால், கனமழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. தொடர் மழையால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
