×

வரும் 31ம்தேதி சங்கர் ஜிவால் ஓய்வுபெறும் நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்?

சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்பது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக யூகத்தின் அடிப்படையில் தற்போது டிஜிபிக்களில் சீனியர்களாக உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார், அபய் குமார் சிங் உள்ளிட்டோர்களில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறி வந்தனர்.

வழக்கமாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு முன்பு, தகுதியான 10 பேரின் பட்டியலை ஒன்றிய உள்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ளவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். பின்னர் உள்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் தமிழக தலைமைச் செயலாளர், தற்போதைய டிஜிபி ஆகியோர் கலந்து கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் தகுதி வாய்ந்த 3 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசு அந்த 3 பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும்.

தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டியில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, சஞ்சய்குமார் மாத்தூர், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகிய 10 பேரின் பட்டியல் தமிழக உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக உள்துறையில் விளக்கம் தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரம், தற்போது டிஜிபிக்களாக உள்ளவர்களில் அபய்குமார் சிங் வருகிற ஜனவரி மாதம் ஓய்வு பெறுகிறார்.

இதனால் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை ஒன்றிய அரசு தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தமிழக அரசு பட்டியல் ஒன்றிய உள்துறைக்கு அனுப்பாததால், அவர்கள் தேர்வு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சீமா அகர்வால் நேர்மையானவர். ஆனால் சட்டம் ஒழுங்கு பதவியில் நீண்ட நாட்கள் இல்லாதவர். ஆனால் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சட்டம் ஒழுங்கை சரியாக கையாளாமல் கோட்டை விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், நிரந்தர டிஜிபிக்கள் நியமிக்கப்படாமல், தற்காலி டிஜிபியாக ஒரு நேர்மையான, நிர்வாகத்தில் திறமை வாய்ந்த ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய முடிவு செய்தது.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி பதவிக்கு வருவது யார் என்பது குறித்து வெளியான அனைத்து யூகங்களையும் பொய்யாக்கும் வகையில், தற்போது தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். 8.5.1968ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். பிஏ (எகனாமிக்ஸ்), எம்ஏ (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழ், ஆங்கிலம், இந்தி சரளமாக பேச மற்றும் எழுதக்கூடியவர்.

வெங்கட்ராமன், காவல் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்டவர். சைபர் குற்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளில் உறுதியாக இருப்பவர் என்று கூறப்படுகிறது. வரும் 31ம் தேதி ஓய்வு பெற்றும் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநராக உள்ள சைலேஷ் குமார் யாதவ் ஆகியோருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் நாளை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாளையே புதிதாக தற்காலிக டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின்றன. மேலும் முதல்வர் வருகிற 30ம் தேதி வெளிநாடு செல்கிறார். இதனால் அதற்கு முன்னதாக அதாவது 29ம் தேதி புதிய டிஜிபி பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

Tags : Venkatraman ,DGP ,Tamil Nadu ,Shankar Jiwal ,Chennai ,Tamil Nadu Police ,Tamil Nadu… ,
× RELATED டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு...