×

வாக்கு திருட்டு குறித்து மோடி, அமித்ஷா வாய்திறக்காதது ஏன்? பீகார் யாத்திரையில் ராகுல்காந்தி கேள்வி

மதுபனி: பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை நடத்தி வருகிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி. அவருடன் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வியாதவும் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். இந்த யாத்திரையின் போது ராகுல்காந்தி கூறியதாவது:

அரசியலமைப்பைப் பாதுகாக்க மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். பீகார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பாஜ மற்றும் தேர்தல் ஆணையம் மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனால் பா.ஜ தலைவர்களை மக்கள் வாக்கு திருடர்கள் என்று அழைக்கத்தொடங்கி விட்டனர். பாஜ தலைவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறார்கள்.

மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும், இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும். வாக்களிக்கும் உரிமையை இழந்தால், அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு வாக்குகள் முக்கியம், ஏனென்றால் வாக்குகள் இல்லாமல், உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசியக் கொடியை ஒருபோதும் வணங்கவில்லை.

இப்போதும் கூட, அவர்கள் எழுந்து நிற்பது போல் நடிக்கிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்கள் வேறு ஒன்றைச் சொல்கின்றன. ஏனென்றால் அரசியலமைப்பு புத்தகம் தலித்துகள், ஓபிசிக்கள், இபிசிக்கள், பெண்கள், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த உரிமைகளை வழங்க அவர்கள் விரும்பவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி பாஜ அரசு இன்னும் 40-50 ஆண்டுகளுக்கு தொடரும் என்று கூறுவார்.

அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபட்டதால் அவர் அதைச் சொன்னார் என்பதை இப்போது உணர்ந்தேன். அந்த வாக்குத்திருட்டு குஜராத்தில் இருந்து தொடங்கியது. இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் பரவி விட்டது. எனக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் நான் இதை முன்பே சொல்லவில்லை. நான் பொது மேடைகளில் பொய் சொல்ல மாட்டேன்.

இப்போது அனைத்து தகவல்களையும் பெற்ற பிறகு எனக்குத் தெரிந்ததை உண்மை என்று அறிந்த பிறகே சொல்கிறேன். மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல்களின் போது, ​​அவர்கள் முதலில் தேர்தல் தேதிகளை மாற்றினர். யார் தேர்தல் ஆணையராக வேண்டும் என்பதை பிரதமர்தான் தீர்மானிக்கிறார். அதனால் தான் இன்று வரை வாக்கு திருட்டு குறித்து மோடியோ, அமித்ஷாவோ வாய் திறக்கவில்லை என்றார்.

* மக்களின் நம்பிக்கையை பா.ஜ இழந்துவிட்டது
பிரியங்கா காந்தி கூறுகையில்,’ மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதால் தான் பா.ஜ வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. பாஜ மற்றும் அதன் கூட்டாளிகள் உங்கள் வாக்குகளைத் திருட அனுமதிக்கக்கூடாது. பாஜ தலைவர்கள் வாக்குகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் குடியுரிமையைத் திருடுகிறார்கள்’ என்றார்.

Tags : Modi ,Amit Shah ,Rahul Gandhi ,Bihar ,Madhubani ,Lok Sabha ,Opposition Leader ,Tejashwi Yadav ,Congress ,General Secretary ,Priyanka Gandhi ,Telangana ,Chief Minister ,Revanth Reddy ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...