×

இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சி: அண்ணா பல்கலை மாணவர்களை அழைக்கும் ஜப்பான்

சென்னை: ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, டெலாய்ட் மற்றும் டேலண்டி ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையே உயர் திறன் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. அதற்கு இந்தியாவில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 9 தொழில்நுட்ப பல்கலை கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகமும் இடம் பெற்றிருந்தது.

ஒரு வாரம் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அந்த துறையின் வளர்ச்சி மற்றும் வேலையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் படிப்பது, வேலைவாய்ப்புகளை பெறுவது தொடர்பாக 50 ஆயிரம் மாணவ-மாணவிகளை இந்தியா-ஜப்பான் பரிவர்த்தனை செய்து கொள்ள ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செமி-கண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் திறன் வாய்ந்த இந்தியர்களை ஜப்பான் நிறுவனங்களில் பங்கு பெற செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த பரிமாற்றம் மூலம் அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக 7 நிறுவனங்களை சேர்ந்த 26 பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் பலரும் நேற்று அண்ணா பல்கலைக் கழகம் வந்திருந்தனர்.

அவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழக தொழில் கூட்டுறவு மைய இயக்குநர் சண்முக சுந்தரம் பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள், மாணவர்களின் திறன், பல மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 வளாக கல்லூரிகளின் சிறப்புகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்த அவர் கட்-ஆப் மதிப்பெண் பெரும் மாணவர்களில் அதிகமானோர் அண்ணா பல்கலைக் கழகத்தை தான் தேர்வு செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜப்பான் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘எங்கள் நாட்டில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் எங்கள் நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகையின் காரணமாக அதனை கையாளுவதற்கு சிறந்த வல்லுநர்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும். அதனால் உலகெங்கிலும் உள்ள உயர்தர கல்வி நிறுவனங்களில் இருந்து சிறந்த மாணவர்களை தேர்வு செய்து வருகிறோம்.

ஜப்பானில் நடந்த இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியின்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் சிறப்புகள் எங்களுக்கு பிடித்திருந்தது. இங்கு படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன், செயல்பாடுகள், தேர்ச்சி விகிதங்கள் உள்ளிட்டவை வெகுவாக கவர்ந்துள்ளன. எங்கள் நாட்டிற்கு கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரி டீன் ஹரிஹரன், அண்ணா பல்கலைக் கழக பன்னாட்டு தொடர்புகள் மைய இயக்குநர் பாஸ்கரன், தொழில் கூட்டுறவு மைய துணை இயக்குநர் ஷிபு உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். இதனத்தொடர்ந்து ஜப்பான் தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள் அண்ணா பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

* அடுத்ததாக ஒரே நேரத்தில் 2 டிகிரி (3+1)+1
4 ஆண்டு இளநிலை படிப்பில் அண்ணா பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு படிப்பை மாணவர்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதனை முதலாம் ஆண்டு கல்லூரியில் சேரும்போதே மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முதுகலையையும் அங்கேயே படிக்கும் வாய்ப்புகளும் வழங்கப்படும். அப்படி படித்தால் அவர்களுக்கு 2 டிகிரிகள் கிடைக்கும். இதற்கு அதிக அளவிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* இரட்டை டிகிரி 2+2
முதல் இரண்டு வருடம் அண்ணா பல்கலைக் கழகத்திலும் மீதம் உள்ள 2 வருடம் வெளிநாட்டு பல்கலைக் கழகத்திலும் பயிலலாம். இதற்கு 2 பல்கலை கழகத்தில் இருந்தும் தனித்தனியாக டிகிரிகள் வழங்கப்படும்.

* மாணவர்கள் பரிமாற்றம்… ஒரே நேரத்தில் 2 டிகிரி… இரட்டை டிகிரி அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பெருகும் வாய்ப்புகள்
அண்ணா பல்கலைக் கழக புதிய கல்வி விதிமுறைகளின்படி, நடப்பாண்டில் இருந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பான் மொழி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் திறன் இன்னும் அதிகரிக்கும், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

தற்போது மேலும் சிறப்பாக 3 சிறப்பு அம்சங்களை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. முதலாவதாக மாணவர்கள் பரிமாற்றம். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமல் கூட அந்த நாட்டில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களில் 6 மாதம் அல்லது 1 வருடம் கல்வி பயிலலாம். ஆனால் அதற்கான டிகிரியை அண்ணா பல்கலைக் கழகம் தான் கொடுக்கும்.

Tags : India ,Japan ,Anna University ,Chennai ,Ministry of Economy, Trade and Industry of Japan ,Deloitte ,Talent Holdings ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...