×

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் நியாயவிலை கடை விற்பனையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் நியாயவிலை கடை விற்பனையாளருக்கு நாள் ஒன்றுக்கு நகர்வு பணிக்காக ரூ.200 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 18 வயதிக்குட்பட்டவர்களையும் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். ஊரக பகுதிகளில் குறைந்தபட்சம் 60 குடும்ப அட்டைகள், நகரப்பகுதிகளில் குறைந்தபட்சம் 70 குடும்ப அட்டைகள், மலைப்பகுதியில் குறைந்தபட்சம் 50 குடும்ப அட்டைகள் அடிப்படையில் நியாயவிலை கடை குழுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஏற்படும் செலவுத்தொகை ஊரக பகுதிக்கு ரூ.40, நகர பகுதிக்கு ரூ.36, மலைப்பகுதிக்கு ரூ.100 செலவுத்தொகை நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

முதன்மை நியாயவிலை கடையின் விற்பனையாளருக்கு நாள் ஒன்றுக்கு நகர்வு பணிக்கு ஊக்கத்தொகையாக ரூ.200 வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் ஒவ்வொரு மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்த வேண்டும். இருப்பினும் நியாயவிலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் மற்றும் கள நிலவரத்தை பொறுத்து அந்தந்த பகுதிகளுக்கேற்ப விநியோகம் செய்யப்படும் நாட்கள் தீர்மானித்திட வேண்டும். அதேநேரம் நியாய விலை கடை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தினங்கள் மூடாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கூடுதல் ஒதுக்கீட்டினை மாவட்ட வழங்கல் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கூடுதல் ஒதுக்கீடு பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்கான முன்னோட்ட ஆய்வினை செயல்படுத்திட மேற்கொள்ளப்பட்ட செலவின விவரங்களை தனி அறிக்கையாக பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Registrar of Cooperative Societies ,Nandakumar ,Chief Minister ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...