சென்னை புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள் ஒருநாள் சுற்றுலா வரும் 17ம் தேதி முதல் இயக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா நடத்தப்பட்டது. இந்த சுற்றுலாவானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோயில்கள் தொகுப்பு சுற்றுலா 17.9.2025 முதல் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
