×

சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது மார்க்கெட்டில் நிரம்பிய மக்கள் கூட்டம் வேலூரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு

வேலூர், ஆக.27: வேலூரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது. மாவட்டத்தில் 2 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனித உயிரின் தோற்றமும், முடிவும் மண்தான் என்ற தத்துவத்தை உணர்த்தும் பண்டிகையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை. முழுமுதற் பொருளான விநாயக பெருமானின் அவதார திருநாள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையாக இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்காக வேலூர் லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட், மண்டி வீதி, கமிசரி பஜார், டோல்கேட், தொரப்பாடி, வேலூர் வேலப்பாடி மார்க்கெட், சார்பனாமேடு பகுதிகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், வண்ண குடைகள், பூக்கள், எருக்கம்பூ மாலைகள், நிலக்கடலை, கம்பு, சோளம் கதிர்கள், பழங்கள், கலர் பேப்பர்களால் ஆன செயற்கை பூக்கள் உட்பட பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் நடைப்பாதை கடைகளில் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். வேலூர் மாவட்டத்தில் வீடுகள் மட்டுமின்றி, வீதிகளிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தேவை அதிகரிக்கும் நிலையில், விலையும் அதிகமாகவே இருக்கும். இது விநாயகர் சதுர்த்தி பண்டிகை மட்டுமல்ல, அனைத்து பண்டிகை நாட்களிலும் இதுதான் நிலை’ என்றனர்.

Tags : Vinayagar Chaturthi festival ,Vellore ,
× RELATED சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம்...