×

மாணவர்களின் கனவுகள் நனவாகத் துணைநிற்பதும் என்னுடைய கடமை : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காலை உணவு திட்டம் பஞ்சாபிலும் பெறும் நன்னாளினை ஆவலுடன் நோக்கியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாநில எல்லைகளையும் தாண்டி பலரையும் ஈர்ப்பது தொடர்கிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்காக அவருக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இங்கு இத்திட்டத்தின் தாக்கத்தைக் கண்டபின்னர், தனது பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோன்ற திட்டத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும், அதுகுறித்து கலந்தாலோசனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கும் நமது நன்றிகள்!அவரது சொற்கள் மகிழ்ச்சியாலும் பெருமித உணர்வாலும் என் நெஞ்சத்தை நிறைக்கின்றன. பஞ்சாபிலும் இத்திட்டம் செயல்வடிவம் பெறும் நன்னாளினை ஆவலுடன் நோக்கியுள்ளேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு பதிவில், “இந்த மழலை மாணவச் செல்வங்களின் முகங்களில், நான் காண்பது புன்னகையை மட்டுமல்ல! நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன். உயிர்காக்கும் மருத்துவர்களாக, நல்லாசிரியர்களாக, கவிஞர்களாக, விளையாட்டு வீரர்களாக, அவர்கள் விரும்பும் எதுவாகவும் உயரப் போகும் வெற்றியாளர்களைக் காண்கிறேன்.மாணவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது மட்டுமல்ல, அவர்களின் கனவுகள் நனவாகத் துணைநிற்பதும் என்னுடைய கடமை எனச் செயலாற்றி வருகிறேன்!

ஒவ்வொரு காலையும், நம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும்போது, எனது கடமையை நிறைவேற்றுவதற்கான உறுதி மேலும் வலுப்பெறுகிறது. நம் மாணவர்களைப் பரிவுடன் கவனித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஊக்கம் பிறக்கிறது.இன்று தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது அனைத்துக் குழந்தைகளும் நெஞ்சில் நம்பிக்கையோடு வளரும், மேலும் வலிமையான, ஒளிமயமான தமிழ்நாட்டை கட்டியெழுப்புவதற்கான எனது உறுதிமொழி! மாணவர்கள் உயர, மாநிலம் உயரும்! “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Punjab ,Tamil Nadu ,
× RELATED ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில்...