- சதர்சன் ரெட்டி
- அமித் ஷா
- புது தில்லி
- உச்ச நீதிமன்றம்
- யூனியன்
- அமைச்சர்
- இந்தியா கூட்டணி
- சுதர்சன் ரெட்டி
புதுடெல்லி: இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 22ம் தேதி கேரளாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என குற்றம்சாட்டினார். அவரது சல்வா ஜூடும் தீர்ப்பு இல்லாவிட்டால், நக்சல் தீவிரவாதத்தை 2020ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும் என அமித்ஷா பேசினார். இது கடும் சர்ச்சையானது. சட்டீஸ்கரில் நக்சலைட்களுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்தி போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜூடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக சுதர்சன் ரெட்டி இருந்த போது, சல்வா ஜூடும் அமைப்பு சட்டவிரோதமானது என்றும், அந்த அமைப்பில் இருப்பவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை வைத்து தான் சுதர்சன் ரெட்டி நக்சலைட் ஆதரவு எண்ணம் கொண்டவர் என அமித்ஷா கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த தவறான புரிதலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன் பி.லோக்கூர், ஜே.செல்லமேஸ்வர், ஏ.கே.பட்நாயக் உள்ளிட்ட 7 பேர், உயர் நீதிமன்றங்களின் 3 முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் பிற ஓய்வுபெற்ற நீதிபதிகள் என மொத்தம் 18 பேர் கூட்டறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உயர் அரசியல் பதவியில் இருக்கும் ஒருவர் தவறாகவும், பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடனும் திரித்துக் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. இது நீதித்துறையின் சுதந்திரத்தில் ஒருவித அச்சுறுத்தும் விளைவை ஏற்படுத்துவதோடு, நீதிபதிகளின் மனநிலையையும் பாதிக்கும். சுதர்சன் ரெட்டியின் தீர்ப்பு நக்சலிசம் மற்றும் அதன் சித்தாந்தத்தை எந்த இடத்திலும் வெளிப்படையாகவோ, கட்டாயமாக ஆதரிக்கவில்லை. வேட்பாளர்களின் சித்தாந்தங்களை விமர்சிப்பதை விடுத்து, கண்ணியமான முறையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
* கண்டிக்கக் கூடிய தைரியமானவர்கள் உள்ளனர்: காங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது நாடு துரதிஷ்டவசமாக, தீங்கிழைக்கும் அவதூறு ஆயுதம் மற்றும் திரிந்து கூறும் பயங்கர ஆயுதம் என இரண்டையும் ஒரே இடத்தில் கொண்ட உள்துறை அமைச்சரை கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் அவரை கண்டிக்கும் அளவுக்கு தைரியமான மக்கள் உள்ளனர். சுதர்சன் ரெட்டி குறித்த பொய்களை ஓய்வு பெற்ற நீதிபதிகள் தங்களின் கூட்டறிக்கை மூலம் அம்பலப்படுத்தி உள்ளனர்’’ என்றார்.
