×

தாக்கப்பட்ட எமர்ஜென்சி டெக்னீசியன் 7 மாத கர்ப்பிணி ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்துவது எந்த வகையில் நியாயம்: எடப்பாடிக்கு திமுக கடும் கண்டனம்

சென்னை: திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்எல்ஏ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: மருத்துவ சேவையில் ஒரு துயரமிக்க சம்பவத்தை தமிழ்நாட்டில் நாம் எல்லாரும் பார்த்தோம். நேற்று முன்தினம் ஒரு அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவரும், எமர்ஜென்சி டெக்னீசியனும் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பொறுப்பு மிக்கவராக செயல்பட வேண்டிய எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் பிரசாரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேண்டும் என்றே தொந்தரவு செய்கிறார்கள் என்று மேடையிலேயே பேசி, இனிமேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் வந்தால் நோயாளியாக மாற்றப்படுவார் என்று அச்சுறுத்தினார். பொறுப்பு இல்லாமல் பொதுவெளியில் பேசினார்.

இதனால் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸில் செல்லும் போது, அங்கே பொதுக்கூட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அந்த வழியில் சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பின்னால் இருந்த எமர்ஜென்சி டெக்னீசியன் போட்டிருந்த ஓவர் கோட்டை பிடுங்கி இருக்கிறார்கள். எமர்ஜென்சி டெக்னீசியன் ஒரு பிரசவ பெண் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர் 7 மாத கர்ப்பிணி. 2 மாதத்தில் மகப்பேறு விடுப்பில் போக உள்ளார். பிரசவத்திலும் மக்களுக்கு எமர்ஜென்சி சேவை செய்யலாம் என்று பணியாற்றுபவர்களை தாக்கியுள்ளார்கள். 2 பேர் தாக்கப்பட்டதை அறிந்து, போலீசார் தாக்குதலை தடுத்து அவர்களை பாதுகாத்து திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அந்த 108 ஆம்புன்ஸ்க்கு வந்த போன் கால் இருக்கிறது. வந்த காலின் ஆடியோ ரெக்கார்டு இருக்கிறது.

எடப்பாடியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றுள்ளது. அந்த மயக்கம் போட்டவருக்கு வலிப்பு தன்மையோ, இதய பாதிப்போ, ரத்த குழாய் வெடிப்போ இருந்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு இருக்கும். அதற்கு யார் பொறுப்பு ஏற்று இருப்பார். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே வண்டிக்கு வழிவிடுவோம். மீட்டிங் நடக்கும் போது மீட்டிங்கை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவது தான் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் உருவாக்கின மாண்பு. அதில் நாம் பெருமைப்பட்டு கொண்டு இருந்தோம்.

ஆனால், முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறவர், பிரதான ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துபவர் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது என்பது எந்தவிதத்தில் நியாயம். ஆம்புலன்ஸ் டிரைவரை நோயாளி ஆக்கி அனுப்புவோம் என்று சொல்லாமல் இருந்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. ஆம்புலன்சை கிளியர் பண்றதுக்கு 2 நிமிடம் தான் ஆகும். அந்த 2 நிமிடம் வழிவிடுவோம். இழந்த தமிழ்நாட்டின் மானத்தை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஓரணியில் திரள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dimuka ,Chennai ,Tamil Nadu ,Dimuka Doctor Team ,Eilan ,MLA ,Anna Vidyalaya ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...