சென்னை: சுகாதாரத் துறையில் நீண்டகால முதலீடுகளை செய்து, இந்தியாவில் தமிழ்நாடு பொது சுகாதார வசதிகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி: மயிலாப்பூரை சேர்ந்த சக்கர நாற்காலி பயன்படுத்தும் மூத்த குடிமகள் பாசியா பீவி, சென்னையில் அண்மையில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சுகாதார முகாம் குறித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது, அவர் ‘‘நான் ஒரு அனாதையாக வந்தேன், ஆனால் முழு மனதுடன் செல்கிறேன்” என்று கூறினார். இதுபோன்ற குடிமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், ஆயிரக்கணக்கானோரின் மனமார்ந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2.8.2025 அன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இரண்டு நாட்களில், சுமார் 93,000 பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் முன்னோடி திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், தொற்றா நோய்களை கண்டறியும் வசதியை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது. இந்த திட்டம் 385 கிராமப்புற வட்டங்கள், 8,713 துணை மையங்கள், 21 மாநகராட்சிகள் மற்றும் 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதயம் காப்போம் திட்டம் 2023 – ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. மாரடைப்பு தடுப்பு நடவடிக்கையாக, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு ஏற்படும் இறப்புகளை தடுக்க, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களில் அத்தியாவசிய இதய மருந்துகளின் அவசர டோஸ்களை இத்திட்டம் கிடைக்கச் செய்துள்ளது. விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் உயிர் காக்கும் இலவச சிகிச்சைக்குரிய தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு, பெரிய அளவிலான அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் கூடிய மூன்றாம் நிலை சிகிச்சை வசதிகளுக்காக உள்கட்டமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 1,000 படுக்கைகள் கொண்ட ஒரு முதன்மை மருத்துவமனையாகும். இதில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மற்றும் சாம்பல் நீர் மறுசுழற்சி அமைப்பு போன்ற மேம்பட்ட வசதிகள் உள்ளன.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புறநகர் பிரிவு, 14 பல் மருத்துவ நாற்காலிகள் மற்றும் ஒரு பயிற்சி மையம் உள்பட அதிநவீன பல் மருத்துவ வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100 சதவீதம் புற்றுநோய் பரிசோதனை செய்வதை இலக்காக கொண்ட ஒரு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு தொடங்கியுள்ள ஒவ்வொரு திட்டமும் திராவிட மாடல் அரசின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது.
இந்த கொள்கை, பொது சுகாதாரத்தைச் சமூக முன்னேற்றத்துடன் நீண்ட காலமாகப் பிணைத்து வைத்துள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்றவை இன்றும் நிலைத்து நிற்கும் சிறந்த திட்டங்களாகும். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதல் தொடங்கியது தமிழ்நாடு. 2008ம் ஆண்டில், கலைஞர், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை தொடங்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டார். இதன்மூலம் தமிழ்நாடு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக மாறியது.
இந்த திட்டம் நாட்டின் மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது. அரசு, சிறப்பு மருத்துவ படிப்புகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தியது. இது, அரசு மருத்துவமனைகளில் பன்முகத்தன்மையை உறுதி செய்வதோடு, மாநிலம் முழுவதும் மூன்றாம் நிலை சிகிச்சை மையங்களை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது. சுகாதாரத்துறையில் நீண்ட கால முதலீடுகளை செய்து, நாட்டில் பொது சுகாதார வசதிகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
ஒன்றிய அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இவையெல்லாம் இப்போது ஆபத்தில் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் மாநில பிரதிநிதிகளை கொண்ட இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்பட்டது. இது மையப்படுத்தலை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. நீட் மற்றும் நெட் போன்ற தேசிய தேர்வுகள் வட்டார மொழி வழி மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதித்து, மாநிலத்தின் சமூகநீதி கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்கின்றன. மேலும், தேசிய மருத்துவ ஆணையம் சட்டம் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பதன் மூலம் மருத்துவ கல்வி வணிகமயமாக்கலை தூண்டுகிறது.
ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் அவர்களின் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கேற்ற தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான கொள்கைகளை வடிவமைக்க சுதந்திரம் மற்றும் சுயாட்சி வழங்க வேண்டும். இதன்மூலம், அனைத்து மாநிலங்களும் தங்கள் சுகாதார இலக்குகளை அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக மாறியது. இந்த திட்டம் நாட்டின் மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது.
